புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர். இயேசு கிறித்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
உரோமைப் பேரரசுக்கு வௌியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா, இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் (தற்போதைய கேரளம், தமிழ்நாடு) பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். பாரம்பரியத்தின்படி, திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு 52 இல் திருமுழுக்கு அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ஒத்தமைவு நற்செய்தியாளர்கள், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக தோமாவின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவரது செயல்பாடுகள் பற்றிய குறிப்புகளை யோவான் நற்செய்தியில் மட்டுமே வாசிக்கிறோம். இயேசுவின் பணி வாழ்வின் சில முக்கியமான தருணங்களில், அவரோடு தோமாவையும் இணைத்து காண்கிறோம்.
லாசர் இறந்ததை அறிந்த இயேசு, “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று சீடர்களிடம் கூறியபோது, அவர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். அதே நேரத்தில் தோமா மற்ற சீடர்களிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று துணிவுடன் கூறியதை காண்கிறோம்.
இயேசு இறுதி இரவுணவு வேளையில், தாம் விண்ணகத்திற்கு செல்வது குறித்து மறைபொருளாக பேசிக் கொண்டிருந்தபோது, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்று கேட்டதாக வாசிக்கிறோம். அவரது கேள்விக்கு விடையாகவே, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்ற இயேசுவின் வார்த்தைகள் வெளிப்பட்டன
இறந்து உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக மற்ற சீடர்கள் கூறியபோது, தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்று கூறி உண்மையை தெளிவுபடுத்த விரும்பியதை அறிகிறோம். உயிர்த்த இயேசு தோமா முன்பு தோன்றி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்று கூறியபோது, தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறியதை காண்கிறோம். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்று கூறியதாகவும் வாசிக்கிறோம்.
உயிர்த்த இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, பேதுரு, யோவான் உள்ளிட்டோருடன் தோமாவும் உடனிருந்தார் என்றும் யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.
கிறிஸ்தவர்கள் தோமா கி.பி. 52இல் இந்தியாவிற்கு பயணித்தார் எனவும், முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், அப்போது அங்கு வாழ்ந்த யூத சமூகத்தினரை மனந்திருப்பினார் [1][2] என்றும் நம்பப்படுகிறது. பாரம்பரியமாக குறிப்பிடப்படும் தோமாவின் பணிகள் என்ற நூல், ரப்பான் பாட்டு என்ற வாய்மொழி பாடல் தொகுப்பு ஆகியவை திருத்தூதர் தோமா இந்தியாவில் வாழ்ந்தது குறித்த சான்றுகளை வழங்குகின்றன.
தோமாவின் பணிகள்' என்ற நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டது. அது இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, தோமா இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்து உயிர்துறந்தது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கதையை வழங்குகிறது. இந்த நூல் இந்தியாவில் தோமா என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இரண்டு பகுதிகளில் அவர் பணி செய்த விவரங்களைத் தருகிறது.
இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்தது.[16] அதிக தொலைவில் உள்ள இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அப்போது இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்பவர், கட்டடக் கலைஞர் ஒருவரை எதிர்பார்த்து பாலஸ்தீன் சென்றிருந்தார். அவருக்கு தோன்றிய இயேசு தமது பணியாளரை அழைத்து செல்லுமாறு கூறி, தோமாவை அவருடன் அனுப்பி வைத்தார்.
கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவி செய்ய செலவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் சென்ற அரசர், அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது, அரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென எழுந்து விண்ணகத்தில் தமது அண்ணன் பெயரில் உள்ள மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமா மாளிகை கட்டுவதாக கூறியது உண்மை என்று நம்பிய அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார்.
பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவி மிக்தோனியா (தமிழ்: மகுதானி)யின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி தெரிசியா (தமிழ்: தர்சிகா) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். தெரிசியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.
கொண்டபோரஸ் அரசரின் நாட்டில் பணியாற்றிய பின்பு, அங்கிருந்து செக்கோட்டிரா தீவு வழியாக தோமா மீண்டும் பாலஸ்தீன் சென்றார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவில் நற்செய்தி பணி செய்ய விரும்பிய தோமா, பண்டைய தமிழகத்தின் சேர நாட்டு துறைமுகங்களில் ஒன்றான முசிறியில் கி.பி.52 ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மலபார் கடற்கரை பகுதியில் போதித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார். தோமா கிறிஸ்தவர்கள் என்று தங்களை குறிப்பிடும், இவர்களது வாய்மொழி மரபாக உருவான பாடல்களின் தொகுப்பே ரப்பான் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.
திருத்தூதர் தோமாவிடம் திருமுழுக்கு பெற்ற ஒருவரின் பேரனான தாமஸ் ரப்பான் என்பவர், கி.பி.2ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் இதன் மூலப்பாடலை இயற்றியதாக அறிகிறோம். பல நூற்றாண்டுகளாக வாய்மொழி மரபாக வழங்கி வந்த இந்த பாடல்கள், 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய வடிவில் எழுத்து வடிவம் பெற்றன. மலியங்கரா (கொடுங்கல்லூர்), கொல்லம் (குய்லோன்), நிரனம், நிலக்கல் (சாயல்), கோக்கமங்கலம் (பள்ளிபுரம்), கொட்டகாவு (பரவூர்), பழயூர்[18] உள்ளிட்ட ஏழு இடங்களில் வாழ்ந்த மக்களிடையே தோமா ஆற்றிய பணி குறித்து ரப்பான் பாட்டு விவரிக்கிறது. இங்கு திருத்தூதர் தோமாவால் கட்டப்பட்ட ஆலயங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் தோமாவால் நிறுவப்பட்ட ஆலயம் அறப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இயேசுவைப் பற்றிய தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பிய மக்களுக்கு, தோமா திருமுழுக்கு கொடுத்தது குறித்தும், அவர்களிடையே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது குறித்தும் இந்த பாடல்கள் குறிப்பிடுகின்றன. தோமாவால் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கையும் இதில் காண முடிகிறது. ஒருமுறை வானத்தை நோக்கி நீரை தெளித்தவாறு மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த பிராமணர்கள் சிலரைக் கண்ட தோமா, நீர்த்துளிகளை அந்தரத்திலேயே நிறுத்தி அற்புதம் செய்ததாகவும், அதைக் கண்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பியதாகவும் ஒரு பாடல் கூறுகிறது
மலபார் கடற்கரையில் ஏழு அறப்பள்ளிகளை நிறுவிய பிறகு, சோழமண்டல கடற்கரை வழியாக தோமா சென்றதாக இந்த பாடல்கள் கூறுகின்றன. அங்கு வாழ்ந்த மக்களிடையே பல்வேறு அற்புதங்கள் மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக காண்கிறோம். அரசரையும் மனந்திருப்பும் முயற்சியில் தோமா ஈடுபட்டிருந்த வேளையில், தோமா மீது பொறாமை கொண்ட சிலர் அவரை ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக இந்த பாடல்கள் தெரிவிக்கின்றன.[16] சென்னையில் உள்ள புனித தோமையார் மலையே, தோமா குத்தி கொல்லப்பட்ட இடம் என்றும், சாந்தோம் ஆலயம் உள்ள இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் மரபுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம்.
9ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமன் நாள்காட்டியில், புனித தோமாவின் விழா நாளாக டிசம்பர் 21ந்தேதி குறிக்கப்பட்டிருந்தது. 1969ஆம் ஆண்டு ரோமன் நாள்காட்டி திருத்தி அமைக்கப்பட்டபோது புனித ஜெரோமின் மறைசாட்சிகள் நினைவுநாள் குறிப்பின் அடிப்படையில் திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 3ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான ஆங்கிலிக்கத் திருச்சபைகள் டிசம்பர் 21ந்தேதியே புனிதரின் விழாவை சிறப்பிக்கின்றன. கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் புனித தோமாவின் விழாவை அக்டோபர் 19ந்தேதி (ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 6) கொண்டாடுகின்றனர்.
source and credit: Wikipedia.