கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு குடும்பங்களால் குடியேற்றப்பட்ட கோட்டையூர் கிராமம் தற்போது சுமார் 130 குடும்பங்களாக பெருகி வளர்ந்துள்ளது. இக்குடும்பங்கள்
ஆன்மீகத்தில் வளர்வதையும் ஆலயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் அறிந்த அன்றைய சூராணம் பங்குத்தந்தை அருள்பணி. பாப்பையா 1941 இல் புனித தோமையார் ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்
மக்கள் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பையும், கடினமான உழைப்பையும், இடைவிடா ஜெபத்தையும் செய்தனர். 1947 ஆம் ஆண்டு புதிய தோற்றத்தோடு ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்றைய நாளிலிருந்து இன்றுவரை ஊரின் பாதுகாவலர் புனித தோமையார் பற்பல புதுமைகளை செய்து வருகிறார்.
சாலைகிராமம் பங்கின் பெரிய கிராமமான கோட்டையூர், பங்குத்தளமாக உருவாக பல பங்குத்தந்தையர்கள் முயன்றனர். இறுதியில் அவர்களுடைய நீண்ட நாள் கனவும் ,ஊர் மக்களின் ஆசையும் நிறைவேறியது.
2013 மே மாதம் 31 ஆம் நாள் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் மேதகு முனைவர் செ. சூசைமாணிக்கம் அவர்கள் 77வது பங்காக கோட்டையூரை அறிவித்து ஆணை பிறப்பித்தார். கோட்டையூர் பங்கின் முதல் பங்கு தந்தையாக அருள் பணி. பிரான்சிஸ் ஜெயபதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். அதே நாளில் அவர் பங்குத்தந்தையாக பங்குப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். சாலைகிராமம் பங்கில் இருந்து தரிகொம்பன் கிராமமும், இளையான்குடி பங்கில் இருந்து கபரியேல்பட்டணம் கிராமமும், புதிதாக கோட்டையூர் பங்கோடு இணைக்கப்பட்டது. இப்புதிய பங்கு மக்களை விவிலிய அறிவாலும், தெய்வீக ஞானத்தாலும், ஆழமான நம்பிக்கையாலும் உருவாக்குவதற்கான முயற்சியும், வழிகாட்டுதலும் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புனித ஆரோக்கியத்தாயின் நலம் நிறைவாய் கிடைத்திட புதிதாக கெபி எழுப்பப்பட்டுள்ளது. அன்றிலிருந்து புனித ஆரோக்கியத்தாயின் நலமும், குணமளிப்பும் நிறைவாக கிடைக்கின்றது.